கண்ணனால் பாட்டு பிறந்தது
பாரதி போன்றவர்கள் இந்த உலகில் வந்து சென்றபின் என்போன்றோரும் கவிதை என்ற பேரில் கண்றாவிகளை இணையதளங்களில் இட்டு உங்களை வேதனைபடுத்திட இன்றும் உலவுகின்றனர். :-). போனால் போகிறதென்று நீங்களும் கிளிக் செய்து துர்வசத்தினால் வந்தடைந்து விட்டீர். படித்து விட்டு போவதில் இன்னும் பாவம் சேரப்போவதில்லை.
காலை அலுவலகப்பயணம். சாலைகளில் நெரிசல். ஒன்றும் புதிதல்ல. கன்னடத்தில் ஆல்-இந்திய-வானொலியில் கிராமியப்பாடல். வேறு என்ன செய்வதென்று தவித்த வேளையில், தோன்றிய வார்த்தைகள். பல காலமாக கேட்டனுபவிட்ட பஜனைகளின் உள்தாக்கம் ! முதலில் முதல் வரி
கண்ணா வா கண்ணா வா, கண்ணே ஓடி வா !!
கண்டிப்பாக இரண்டாம் வரி எதுகையுடன் இருக்க வேண்டாமா? அப்போ, கண்டிப்பாக எண் , பெண் போன்ற வார்த்தைகள் தான் அமைக்க வேண்டும். ஹ்ம்ம் ... இரண்டாம் வரி இப்படி
கண்மணியே கண்ணா கண்ணா ஓடி வா !!
ஹ்ம்ம் தாளத்தில் உட்காரவில்லை இன்னும் இரண்டு மூன்று பதங்கள் தேவை.!
கண்ணின் மணியே கண்ணே நீ கண்ணா ஓடிவா
அட. பரவாயில்லையே! வாகனம் நாடு ரோட்டில், ஜன்னல்கள் அடைக்கப் பட்டிருந்தாலும் பக்கத்தில் இருக்கும் மோட்டார்வாகன ஓட்டுநர்கள், என்னை ஓரு மாதிரியாக பார்க்க, உறக்க கத்தி இரண்டு வரிகளையும் பாடி - சொந்தமாக மார் தட்டி கொண்டேன்!!
கண்ணா வா கண்ணா வா, கண்ணே ஓடி வா ,
கண்ணின் மணியே கண்ணே நீ கண்ணா ஓடிவா !
அப்போ அடுத்த வரி ? சுலபம். வா என்கிறேன் வராமல் ஏன் ஓடி ஒளிகிறாய்? அதுவே கேள்வியாக அமைய வேண்டும். கொஞ்சம் வாயேன், கொஞ்சிக்கொள்கிறேன் - சபாஷ் ! .. வரிகள் இப்போ.
கண்ணாம்பூச்சி ஆடுவதேனோ? கண்ணா ஓடிவா ..
கன்னம் முழுதும் தித்திக்கும் முத்தம் கொஞ்சம் தா !!
ஆனால் இரண்டாம் வார்த்தை கொஞ்சம் மாற்றி .. பாடல் இப்போ
கண்ணா வா கண்ணா வா, கண்ணா ஓடிவா !
கண்ணின் மணியே கண்ணே நீ கண்ணா ஓடிவா !
கண்ணாம்பூச்சி ஆடுவதேனோ? கண்ணா ஓடிவா ..
கன்னம் எங்கும் தித்திக்கும் முத்தம் கொஞ்சம் தா !!
பார்க் பிரேக்கில் போட்டுவிட்டு, என்ஜினை அணைத்துவிட்டு, போனில் பதிவியை இயக்கி ... பதிவு செய்ய ஆரம்பித்து - ஒரு மூன்று முறையாவது கத்தி - பாட்டு போல இருக்கு பரவாயில்லை என்று
அருகே வா அருகே வா அருகே அருகே வா
விரைவில் அருகே வந்து மோக்ஷம் கொஞ்சம் தா ..
வண்டிகள் நகர்ந்தன! அலுவலகநிறுத்துமிடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு பதிவு செய்ததை மனைவிக்கு வாட்சாப்பில் அனுப்பி வைத்துவிட்டு வேலையை கவனித்தேன்.
இரவில் வீடு திரும்பியதும் மனைவிடமிருந்து எதிர்பார்த்த விமர்சனம் கிடைக்கவில்லை. ஆனால் நிறைய என்கரேஜ்மெண்ட். "நன்னா இருக்கு. பரவாயில்லை. கொஞ்சம் மோக்ஷம்ன்னா என்ன?" என்ற கேள்வி நின்றது. சரி! "கொஞ்சத்தை பிறகு மாற்றுவோம்".
மீண்டும் காலை அலுவலகப்பயணம். சாலைகளில் நெரிசல். விட்ட பாட்டுக்கு வார்த்தைகள் தேட சிவப்பு விளக்கில் நிற்க .. "அருகே வா" வரியை பின்னே தள்ளிவிட்டு .. அடுத்த வரி வந்தது.
வெண்ணை உண்டு, அவலும் உண்டு கண்ணா ஓடி வா
ம்ஹ்ம் சரியில்லை வா-நாவுக்கு வா-நா ...
வெண்ணை உண்டு, வெல்லம் உண்டு கண்ணா ஓடி வா
கிண்ணம் முழுதும் அள்ளி தாரேன் கண்ணா ஓடி வா
அட இது கொஞ்சம் எம்.ஜி.ஆர் "நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, போல இருக்கே" என்று அந்த மேட்டில் பாடி பார்த்தேன். நன்றாக ராகமாக பாடக்கூடிவயவரிடம் பாட சொல்லி கேட்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.
மண்ணை மட்டும் உண்பாயோ? கண்ணா ஓடி வா
எண்ணம் உன்னில் என்னவென்று வந்து சொல்லி போ
கொஞ்சம் சரி பண்ணி
மண்ணை மட்டும் உண்பாயோ ? கண்ணா நீ சொல்லிடடா
எண்ணம் உன்னில் என்னவென்று, சொல்ல ஓடி வா
இப்போ இங்கே அருகே வா வரியை போட்டு முடிக்கலாம். . மாட்டு பண்ணை என்று நாம் தமிழில் சொல்வது கண்ணன் பாடல்களில் கேட்டது போலெ இல்லையே என்று எண்ணிகொண்டே "பண்ணை - திண்ணை என்று இரு வரிகள் தானாகவே வந்தன
கண்ணா உன் தயவாலே முடிந்தது இது - கொஞ்சம் மானே தேனே சேர்த்து இவ்வாறு
கண்ணா வா, கண்ணா வா, கண்ணா ஓடிவா ...
கண்ணின் மணியே கண்ணே நீ கண்ணா ஓடிவா ! (எந்தன்)
கண்ணாம்பூச்சி ஆடுவதேனோ? கண்ணா ஓடிவா ..
கன்னம் எங்கும் தித்திக்கும் முத்தம் கொஞ்சம் தா !! (இந்த)
வெண்ணை உண்டு, வெல்லம் உண்டு கண்ணா ஓடி வா ...
கிண்ணம் முழுதும் அள்ளி தாரேன் கண்ணா ஓடி வா ! (தங்க)
திண்ணையிலே ஊட்டிடுவேன் கண்ணா ஓடி வா ! (வீட்டு)
எண்ணம் உன்னில் என்னவென்று, சொல்ல ஓடி வா !! (நல்ல)
அருகே வா அருகே வா அருகே அருகே வா ...
விரைவில் அருகே வந்து மோக்ஷம் மட்டும் தா !
இரண்டு மூன்று மெட்டுகளில் முயன்று விட்டு - மண்டையை உடைத்து கொண்டு கடைசியில் "ஆ. வெரி குட். இது நன்னா இருக்கு!" என்று மற்றவர் சொல்லும்படி "வேல் வேல் வேல் வேல் வேல்முருகா வேல், மால்மருகா மாம்பழம் நீ வேலாயுதா வேல்" என்ற மெட்டு நின்றது.
Comments