அடக்கியதும் அடங்கியதும்
அடக்கியதும் அடங்கியதும்
ஒரு நாள் அலுவலகத்திலிருந்து பல சந்திப்புகளுக்குப் பிறகு இரவில் மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்த சமயம் ... ஆம் அது நிகழ்ந்தது - இவ்வாறு நடந்ததேயில்லை - அடக்கமுடியாத நிலைமை - எந்த நிமிஷமும் இதோ பீறிட்டுக்கொண்டு வந்துவிடும் என்று தோன்றியது - வாகனம் செலுத்தும்போதே செய்துவிடலாமா என்றெண்ணினேன்- மனைவி தூங்கியிருக்கமாட்டாள் - வீடு சீக்கிரம் சென்றடைய வேண்டும் - கவனம் கலைந்துவிட்டால் என்ன செய்வதென்று தவித்தேன் சிறிது - ரோட்டிலேயே காரை நிறுத்தி சாந்த படுத்திக்கொள்ளலாமா என்றெண்ணினேன் - மற்றவர் பார்க்க பார்க்க செய்ய தைரியமும் இல்லை - காரில் குளிர் சாதனம் வேறு வேலை செய்யாததனால் ஜன்னல்களை வேறு திறந்துவைத்திருந்தேன் - இது சௌகரியமோ? மற்றவர் கவனித்து விட்டால் என்ன செய்வது? பரவாயில்லை இரவு நேரம் தானே - நள்ளிரவிற்கு வெகு தூரமில்லை - தவிர இது என் வாகனம் - இங்கிருந்து நான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் ... முடிவு செய்து மற்றவர்களை பற்றி கவலையில்லாமல் - லாவகமாக முனைந்தேன் .... நிஜம்தான் செய்தேவிட்டேன் - நம்பமாடீர்கள் - ஆனால் நடந்த உண்மை ..
ஆம் - வாகனம் செல்லும் போதே - எனக்குள் வெகுநேரமாக அடைத்து வைக்கப்பட்டது வெளியில் வந்தது - உரக்க கூவிக்கூவி பிழைகளுடன் கவிதை ஒன்று படைத்தேன் - சரி சரி தப்பு வெகு நாட்களாக அடைத்திருந்த என்றால் சரிதானே ? அய்யா! வேறேதோன்னு நீங்கள் நினைத்திருந்தால் நான் பொறுப்பல்ல !
வீடு சென்று பென்சில் ஒன்று எடுத்து கிடு கிடு வென கிறுக்கித்தீர்த்து - கடைசி மூன்று வரிகளை நிரப்பி - மனைவியிடம் காண்பித்தேன் - - அவளும் ஹும் ஹூம் என்றதனால் வாட்ஸ்ப்பில் உடனடியாக போட்டு - தீர்த்துக்கொண்டேன் - அப்பப்பா ஆசை அடங்கியது !!
இதோ கீழே ...
காவியத்திடலில் தெறித்த கடுகொன்றாய், வியொன்றியற்றினேன்! வெறும் பாவொன்றியற்றினேன்! விரும்பாயிடினும் கரும்பாயினிக்குதென்று, நான் மணந்த நங்கை அவள் நகைக்க, நடித்தாலென்னவென்று என் நலம் நாடும் நால்வர் சற்றே வியக்க, நானும் கவியென்றும், கூவும் குயிலும் பாடும் பறவையும் ஓ பழையனவென்று பல்லிளித்து, விரிந்த வானில் கிரக்கத்தில் பறந்து திரிகின்ற மட்டி மனதே! களித்தது போதும் ! விழியென்றென் கனவை கலைத்ததென் நன்மதியே ! - சீனிவாசன்!
அடுத்த நாள் காலை இன்னொன்று பிறந்தது
கலைஞனென்றும் நல்லிளைஞனென்றும் இந்த வாட்ஸ்சேப் வலைஞனை வாய்களால் வாழ்த்தும் வஞ்சமில்லாவென் வட்டமே!! நாட்டில் இல்லை காட்டிலுமில்லை என்ற அவலத்தில் கற்பனைக்கேணியில் சுரப்பது நீர்க்கு மாறாகவினும் பயனோ - என்றென்னமோ எண்ணிக்கிண்ணமொன்றில் இதோ மீண்டும் - ரசம்! கவிரசம்! - சீனிவாசன்.
சிறிது நீரம் கழித்து மூன்றாவது
கண்ணன் பாட்டு கவிதையா? காதினிக்கக் காவியம் படைக்கும் வைரமுத்துதான் கவியா? வெறும் நாலடியில் நல்லுரையைக் கவிதையென்று கண்ணாமூச்சி காட்டியே களங்கப்படுத்தும் கல் நெஞ்சனே! சிறிது சிந்தி! எதுகையெங்கே? மோனைதானெங்கே? சிந்தனையொன்றே போதுமென்றால் கவிதையின் சிறப்பெங்கே? மொழிக்கு மோசம் செய்யவதென்பதரியாமல் மோகம் பிடித்தலையும் மூடனே முடி!
அதோட நிறுத்துத்திக்கொண்டேன் ! இல்லை அது பொய் ! இங்கே போட்டு தம்பட்டமடக்கிக்க திட்டம் போட்டேன் ... அதான் இங்கே ...
--
சின்னப்ப(பு)யல் சீனன்



Comments