வழி மறைத்திருக்குதே

சென்ற வாரம் சனிக்கிழமை கோயில் சென்றிருந்தோம் - ஸ்ரீ லக்ஷ்மியை தரிசிக்க. - இங்கிருந்து ஒரு மணி நேரம்.


இந்தியாவில் கோயிலுக்கு செல்லலாம் என்றால் "கோயில் சென்றால் தான் பக்தியா?" என்பான் என் நண்பன். "இறைவன் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான்" - என்பான். அதை நான் மறந்திருக்க வாய்ப்பில்லை. பிள்ளைக்கு பிரகலாத் என்றல்லவா நாங்கள் பெயரிடடிருக்கிறோம்?. கல்லூரியில் படிக்கும் போது, வளாகத்திற்குள் இருந்த பிர்லா சரஸ்வதி கோயிலுக்கு போவதுண்டு - சரஸ்வதி தேவி ஒரு பக்கம் இருப்பினும் - கோயிலின் கட்டுமானத்தையும் அழகையும் பார்த்து ரசிக்க மட்டுமே நேரம் போதாது. நான் சாதாரண கல்லூரி மாணவனில்லை போலும் - எனக்கு தெரிந்த மட்டும் லக்ஷ்மி தேவியியை தரிசிப்பதை விட கோயிலுக்கு வரும் மற்ற வேறு பல தேவியரை தரிசிக்க வந்த கூட்டம் அதிகம். இருந்தாலும் கொஞ்சம் புண்ணியம் அவர்களை சென்றடைந்திருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. தன்னை அறியாமல் நேரத்தை போக்க வில்வ இலைகளை கிள்ளி எறிந்து ஈசனின் அருளை பெற்ற நாயனாரின் சரித்திரம் ஒரு சான்று. (http://www.dlshq.org/download/nayanar.htm).


இப்போது தூரம் ஒரு பொருட்டாகி விட்டது. ஒரு வாரம் முன்னரே திட்டம் போட்டு போகவேண்டியிருக்கிறது. ஆனாலும் ஒரு நல்லது அல்ல பிற நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ள அல்லது முறையிட சில முறைகளாவது சென்று விடுவோம். கண்டிப்பாக இதற்க்கு விதி விலக்குகள் இருக்கின்றன. என் நண்பர் ஒருவர் வாரம் தவறாது குடும்பத்துடன் இந்த யாத்திரையை கடை மேற்கொள்கிறார். பொதுவாகவே அவருக்கு பக்தி அதிகம்.

நான் இப்படி சென்று வரும்போது கடவுள் முதலில் மனதில் தோன்றினாலும், கூடவே பற்பல சிந்தனைகளும் தோன்றும்.

--
காரை நிறுத்தினோம். தள்ளி நிறுத்த வேண்டியிருந்தது.

( அமெரிக்காவில் கோவில்களுக்கு வரும் மக்கள் எண்ணிக்கைகளை பார்க்கும் போது மிக வியப்பாக இருக்கிறது. இங்கு கோயில்கள் மற்ற பல நிகழச்சிகளுக்கு மையமாக இருக்கின்றன - நற்பணிகள், இசை நிகழ்ச்சிகள், இதர பல.
அமெரிக்காவில் வளரும் குழந்தைகள் நம் பண்பாடுகளை கல்லாமல் இருந்து விடுவார்களோ என்ற பயமே காரணம் என்று நான் நினைப்பதுண்டு. இந்தியாவில் வளர்பவர்களை விட இங்கு வளரும் இசை, மற்றும் ஸ்லோகங்களில் தேர்ந்த குழந்தைகளின் சதவிகிதம் கண்டிப்பாக அதிகம்.)

--
காரை நிறுத்தினோம். கோபுர தரிசனம். காலணிகளை வெளியில் விட்டு நுழைய, இன்னொரு சிந்தனை - முக்கிய கதவை திறக்காமல் இந்த நுழைவை ஏன் உபயோகிக்கிறார்கள்? யாரையாவது கேட்க வேண்டும். பிள்ளையாரப்பா - கஜானனம் பூத கணாதி - முனு முனுப்பு - பிள்ளைக்கு சொல்லித்தந்தது ஞயாபகம் இருக்குமோ? "குட்டீ, ஸ்லோகம் சொல்லுப்பா" - மூஷிக வாகன .. பளிச்சென்ற வெள்ளை ஒளி பல்புகள் ... பள பள என்று துடைத்து வைக்கப்பட்ட பளிங்கு தறை .... அம்மாவின் கவலை - கால் ரொம்ப ஜிலுப்பாக இருக்கே - குழந்தைக்கு "சாக்ஸ்" அவிழ்த்தது தப்போ? - ஐந்து கறத்தனை ஆனை முகத்தனை... "அர்ச்சனா ஸ்பான்ஸர்ஸ்??" என்ற பலமான குரல், அர்ச்சகரிடமிருந்து. அம்மா, சீட்டு வாங்க மறந்துட்டேன் -ஒரு நிமிஷம் - அலுவலகத்திற்கு ஓடி - சீட்டை வாங்கி - அதே வேகத்தில் தோப்புக்கரணம், மற்றும் வலம் முடித்து, லஷ்மி அர்ச்சகரிடம் அர்ச்ச்னை பொட்டலத்தை ஓப்படைத்தேன்.. தேங்காயில்லை போலும் .. வெறும் இரண்டு வாழைப்பழங்கள்தான்.

லஷ்மி தரிசனம்.... ஆ எவ்வளவு அழகான அலங்காரம்..எங்கிருந்துதான் இவ்வளவு பூக்கள், பூமாலைகள் கிடைக்கிறதோ? "கோத்தரம்?" ..... "நஷ்சத்திரம்?" ... - "சக குடும்பானாம்" .... இவருக்குஎன்ன அவசரம் ? மனைவி கைவசம் இருந்த வர்ணங்களை பாடத் தொடங்குகிறாள் - நல்ல குரல்தான்.. மீண்டும் லஷ்மி .. கண்ணை முடி சில நொடிகள் தியானம்.. "அப்பா .. தூக்கி.. தூக்கி".. பிள்ளை தோளின் மேலமர்ந்தான் - வானர தரிசனம் .. மற்றவர்க்கு. "செல்லம், உம்மாச்சி வேண்டிக்கோப்பா..."

ஏன் ஊதுபத்தி யில்லை? சூடத்திற்கு பதிலாக - எண்ணை விளக்குதானா? - வேறொரு நோட்டீஸ் ஒட்டியிருந்தது கண்ணில் படாமல் போகவில்லை - "ப்ளீஸ் ப்ரிங் ஸ்கிம்மிட் மில்க் ஒன்லி - இட் எல்ப்ஸ் த ட்ரெயின் (Please bring skimmed milk only - it helps the drain). எனக்கு பக்தி இருக்கிறது என்று நினைத்திருந்தேன்.. வெளிப்பட வில்லயோ? ஏன் இவ்வளவு சிந்தனைகள் - எதோ ஒன்று இல்லாதது போல் தோன்றுகிறதே.

தீர்த்தம் உறியும் சத்தம் என்னை எழுப்பியது.

"hello.. ஞயாபகம் இருக்கா?" - 10 வருடம் முன்னால் பார்த்திருக்கிறேன். கல்லூரியில் சீனியர். "அட நீங்களா? இங்கே தான் இருக்கிறீர்களா??" - முன்னுரைகள், குசலங்கள், "ஷி இஸ் சோ க்யூட்! என்ன வயசு?" ..என்ற வகை உரையாடல்கள். .. அட பெருமாள் வெயிட்டிங் ...

அங்கிருங்து ஒரு வலம்.. பெருமாள் தரிசனம்.. சடாரி, தீர்த்தம். "சீனிவாசா திருவேங்கட முடையாய்" - மனைவியின் குரல். பின்னர் "நர்த்தன சுந்தர நடராஜர்..", "கந்தா குமரா கதிர்வேலா", "அஞ்சனா கர்ப்ப சம்பூதம்".... குழந்தைக்கு பசிக்குமோ? என்ன உணவு குடுப்பது, நாம் எங்கு இரவு உணவு சாப்பிடுவது? இன்னும் சில சிந்தனைகள்

நடுவில் இன்னொரு "அலோ..எப்படி இருக்கீங்க?"...

விட்ட இடத்திலிருந்து தொடர ... மார்ஸ், வீனஸ், ஜூபிடர் -என்று என் தவப்புதல்வான் மொழி பெயர்க்க - "நவக்க்ரக" வலம்.

"குட்டீ, கன் யூ கவுண்ட் த நம்பர் ஆப் ஸ்டெப்ஸ்?" - "ஸ்வாமியே ஐயப்பா ...", சாஷ்டாங்கம், சகஸ்ரநாமம்...என்று இயந்திரமாக முடிந்து - நினக்குமுன்னே காரில்.. என்னடா இது பொருட்காட்சி அல்லவே.. ஒரு "கிக்" இல்லையே என்று நினைத்தேன். நாத்திகன் ஆகிவிட்டேனோ?

இவ்வளவு எளிதான தரிசனம்? கால்கள் சிறிதும் கூட பயன்படவில்லை. நடையில்லை. வியர்வையில்லை. நெரிசல் இல்லை. தேங்காயில்லை. சூடம் இல்லை.


காரில் இசைத்தட்டை இயக்கினேன்.. அருமையான பாடல் .. சஞ்சய் சுப்பிரமணியம் ... நாட்டைகுறிஞ்சியாம் .. தமிழ் .. ஆகா... மிக எளிமையான வார்தைகள் ..எனக்கே புரியும் போலிருக்கிறதே.. .. கோபால க்ருஷ்ண பாரதி என்றது .. சென்ற மிதாஸ் (MITHAS) கச்சேரியின் போது வாங்கிய இசை தட்டு...

"வழி மறைத்திருக்குதே மலை போலே ஒரு மாடு படுத்திருக்குதே ..
பாவி நந்தன் இந்த ஊரில் வந்து
இவன் பாவம் தீரேனோ பாதத்தில் சேரேனோ ஏறேனோ
சிவலோக நாதா...
தேரடியில் நின்று தரிசித்தால் போதும் கோயிலில் வரமாட்டேன்
ஒரடி விலகினால் போதும், இங்கே நின்று
உற்று பார்கவே சற்றே ஆகினும் விலகாதோ உந்தன் மாடு... "

நந்தனார் சிதம்பரத்தில் உள்ளே செல்ல அனுமதிக்க படாமல் தவித்து பாடுகிறார்.. நந்தி மாடு மறைக்கிறது .. உருகி உருகி பாடுகிறார்.. சிவலோக நாதனிடம் உரையாடுகிறார்.. என்னையே மறந்தேன். கேட்டுக்கொண்டே கற்பனை செய்து பார்தேன் - ஆகா - எனக்கு "அது"ஏற்பட்டது -.. ஆமாம்.

சில சமயங்கள் - "ரிசுவல்ஸ்"என்பார்கள் - அவை முக்கியம். இந்த விஷயத்தில் சூடம் ஒன்று. அது மற்றும் "ஆம்பியன்ஸ்"என்பார்கள் - அவையும் முக்கியம். பலமான மந்திர ஒசை, இருட்டு அல்லது மங்கலான ஒளி, கூட்டம், பிசு பிசு என்று ஒட்டும் தரை, விபூதி வாசனை, பழ வாசனை, பூ வாசனை, ஊதுபத்திகள், சாம்பிராணி, எண்ணை விளக்குகள், கால் வலி, வியர்வை, தேங்காய் - எதுவுமே இங்கு இல்லை. இதெல்லாம் என் மனதில் பதிவாகி இருக்கின்றன - கோவில் என்றால் எனக்கு தோன்றுவன. இது எதுவும் இல்லாமல் இன்று கோவிலில் எனக்கு "அது" ஏற்படவில்லை. ஆனால் என் கற்பனையில் இந்த பாட்டை நிஜமாக்க முயலும் போது - என் மனம் தானாகவே நான் அறிந்திருந்த, நான் பழகிய "கோவிலின் ஆம்பியன்ஸை" .. நினவுகளிலிருந்து மறுஒட்டம் (playback) செய்திருக்க வேண்டும் .. அதானால்

எனக்கு "அது"ஏற்பட்டது -.. ஆமாம். இன்று கோயிலில் எற்படாதது..

"பரவசம். பக்தி பரவசம்". (புல்லரிப்பு என்பார்கள் சிலர்)

இனி நான் கோவில் சென்றாலும் .. இல்லாவிட்டாலும் - எந்த மாடும் என் பரவசத்திற்கு "வழி மறைக்காது"!!

--
சீனன்

Comments

Unknown said…
தலை தெரியாமல் ஓடி மறைந்தேன்.

இந்த கதை தந்த ஓளி கண்டு மகிழ்ந்தேன்.

முரளி
jeevagv said…
ஏன் அப்புறம் எழுதவேயில்லை.
இரண்டொரு வரிகளாவது எழுதலாமல்லவா?
Sagash vasu said…
intha paadal paadiyathu chidambarathil illai.....thiruppungoor enum ooril

Popular posts from this blog

கண்ணனால் பாட்டு பிறந்தது

ஸ்வேதபூதி த்ரிபுண்ட்ரேண ....