கவிதை பிறந்த கதை - சிசேரியன் முறையா சுகப்ரசவமா ?
கவிதைகள் எப்படி பிறக்கின்றன ? தெரியவில்லை . என் அனுபவத்தில்இன்னொரு முறை கவிதை ஒன்று பிறந்தது. அதன் பிறப்பு அறுத்தெடுத்ததா அல்லது சுகமா என்று அறிய வேண்டும்.
மனதிலே வார்த்தைகள் கோர்வையாக தானே வரும் பொழுது அவற்றை உடனடியாக அரவணைத்து, கொஞ்சம் மெருகேற்றி, எழுதி விடவேண்டும். அவ்வளவு தான் கவிதை. கோப்பாக இருக்கின்றதா, கவி இலக்கணத்துக்கு உட்ப்பட்டுள்ளதா என்றெல்லாம் பார்க்க முடியாது கவிதைக்கு இலக்கணமுண்டோ? அறிந்தவர் கூறலாம்..
மீண்டும் அந்த உத்வேகம் என்று பிறக்கும் என்று தெரியாது. எழுதி விடவேண்டும். அம்மாதிரி ஒரு நாள் ஒரு கவிதை உருவானது .. அதன் கதை..
ஆடிக்கு ஒரு முறையும் அமாவாசைக்கு ஒரு முறையும் என்றால் கூட பரவாயில்லை, இங்கே ஒரு யுகத்துக்கு ஓரு பதிவு - .. போனால் போகட்டும் -- செய்ய வேண்டியது தான் ... நன்றாக இருப்பது போல் இருக்கு, போட்டு தான் பார்ப்போமே என்று இங்கேயே கதையுடன் கூடிய கவிதை.
முதல் வரி .. இப்போ படு சீக்கிரமா ஒரு கவிதை எழுத முடியுமா என்ற எண்ணம் முதலில். எப்போதும் பேப்பர் பேனா அப்டீனெல்லாம் தேடிக்கொண்டு அலையை முடியாது. சரி என்ன விஷயத்தை பத்தி எழுதலாம் என்ற யோசனையெல்லாம் வராது. அந்த மாதிரி ஒரு விஷயத்தை வைத்து கவிதை எழுதுவதென்பது ஒன்று. ஆனால் பெரும்பான்மையாக ஒரு "சிட்டிவேஷன்" என்று சொல்லக்கூடிய அந்த சூழல் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும் வார்த்தைகள் பிறக்கும்.
எப்போதுமே பேப்பர் பேனா வைத்துக்கொண்டு கவிதை யாரும் எழுதுவதில்லை என்பது என் கருத்து. மனதிலே தோன்றுவதை வாயிலே உரக்க இருமுறை கூவி - கையை தட்டிப்பார்த்து ம்ஹும் இது சரியில்லை அது சரியில்லை என்று வார்த்தைகளை முன்னும் பின்னும் போட்டு முதல் வரி வரும்.. பிறகு இரண்டாம் வரி எதுகை மோனையுடன் .. வரும் ... இரண்டு மூன்று வரிகள் இவ்வாறு காற்றிலே கடத்திய பிறகு பேப்பர் தேடுவோம். என்னுடைய நிலையில் இந்த கம்ப்யூட்டர் ...
அது வந்தவுடன் கூட்டி கழித்து பார்த்தல் என்ன விஷயத்தை பற்றி இந்த கவிதை என்று அமைந்துவிடும் .. இனிமேல் எப்படி சொல்வது என்பது தான் ..
சில சமயம் கடைசியில். வரிகள் அமையும் போது முக்கிய கருத்து வந்து விடும் ... வார்த்தைகளும் வரிகளும் வற்ற ஆரம்பிக்கும் .. அப்பொழுது நிறுத்திக்கொள்ள வேண்டும்.
நம்ம கதைக்கு வருவோம் ..
நம்பினால் நம்புங்கள் ...
சங்கராந்திக்கு பிறகொருநாள்...
பிற்பகல் பண்ணிரெண்டு மணிக்கு பின் ...
மொட்டை மாடியிலே, பட்டை பகலிலே, ....
ரெட்டை சட்டையையும், குட்டை பாவாடையையும், ...
வெயிலிலே உலர்த்தும் செயலிலே இறங்கிய என்னுள் ...
வார்த்தை நீரோட்டம்...
அதை உடனேயே இங்கு பதிவிட்டிருக்கிறேன்,
சொட்டை தலையிலே, பட்டை சூரியனின் ..
ரெட்டைத் தாக்கம்தானோ என்னவோ ..
தமிழ் மீதும் என்னை எழுப்பியது
ஆஹா ஒரு கவிதை எழுதுவோம் (சொல்லுவோம்)
"என்ன பெரிய கண்ணதாசனா? நினைச்சோன்னே கவிதை எழுதறதுக்கு?" என்று தோன்றியவுடன்... முதல் வரி வந்ததது
"கண்ணிமைக்கும் நேரத்திலே கவி அமைக்க நான் என்ன கண்ணதாசனா?"
க-நாவிலே வார்த்தைகள் இருக்கு - அப்போ டக்குன்னு காளமேகம்னு இன்னொன்னு கவி நமக்கு மனதிலே வந்த்துட்டார் ... சரி அதையும் போட வேண்டியதுதான்.
"காளமேகம் கண்டிராத" தை நாம் என்ன எழுதி கிழிக்கப்போறோம்னு தோன்றியதும் அதுவும்
வரியாகியது
கவிதைன்னு சொன்னால் மஹாகவி பாரதி இல்லாமல் சொல்ல முடியாது - அதனாலே - அடுத்தது - அவர் பெயரை வைத்து ஒரு வரி அப்படீன்னு எண்ணம். நமக்கோ வெறும் ஆண்பா, பெண்பா மட்டும் தான் தெரியும். வெண்பா எல்லாம் தெரியாது ... அப்போ சரி அதையே விஷயமாய் வைத்து அடுத்த வரி
"பா இயற்றி பண் அமைத்து" அப்டீன்னு வந்தது.
இப்போ மூணாவது வரி வந்தவுடன், முதல் வரி என்ன சொன்னோம்னு மறந்து போச்சு,
மட மடனு வேலையை முடித்து, "கிளிப்" எல்லாம் போட்டுட்டு .. வீட்டுக்குள் வந்து .. " கம்ப்யூட்டரை" தேடி ஓட....
வீட்டிலே ஒரு பயல் வீ-ஸ்குவாயர் யூ-ஸ்குவாயர் அப்டீன்னு எதோ கத்திகொண்டே -.
"அப்பா 'பூஸ்ட்' கிடைக்குமா?" -
"அம்மாவை கேள்" என்று பதிலளிக்கு முன்
"அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. ஷீ ஐஸ் ரெஸ்டிங்" என்றான்.
எப்படியாவது தட்டி கழித்தால் தான் இந்த கவிதை கதை முடிக்க முடியும் .. இன்னொரு நாள் இந்த உற்சாகம் வராது ... என்று நினைத்துக்கொண்டே ..
"டேய்" இப்போதானேடா சாப்டே? என்ற கேள்விக்கு
"ஆமாம். ஸோ?" என்ற சத்தியாமான பதில்.. "ஸோ .." சரி தான்
"டேய். அப்பா கவிதை எழுதறேன். இதை டைப் செஞ்சிட்டுவரேன். பத்து நிமிஷம்" என்றவுடன்
"இதையேதான் பத்து நிமிஷத்துக்கு முன்னால் சொன்னியே .... பால் பொங்கும் பொழுது கவிதையும் பொங்கும்பா. பூஸ்ட்பா ப்ளீஸ். நாளைக்கு எக்ஸாம். நான் படிக்கறேன். அம்மா வுட் ஹவ் கிவென் "
சரி என்று பாலை அடுப்பில் ஏற்றிவிட்டு .. ஆப்பிளை மைக்ரோ வேவில் வைத்து .. அட இல்லீங்க .. ஆப்பிள் கம்ப்யூட்டரை மைக்ரோ வேவ் மேலே வைத்து.. "பிளாக்கரை" இயக்கி பதிவை ஏற்ற ஆரம்பித்தேன் - கவிதை மட்டும் போதாது - கதையும் எழுதினால் தான் சுவாரஸ்யமாக இருக்கும் என்று ..... கதையையும் எழுத ...
கவிதை மீண்டும்... எங்க விட்டோம்.. ஆம் பாரதியில் ....
"பா இயற்றி பண் அமைத்து கவிதை பாட நான் ஒன்றும் பாரதி இல்லை .. அப்படி சொல்லிக்கொள்ளவும் இல்லை " .. அடுத்த வரி வரை டிப் செய்து ...
ஐயோ.... பாரதி-யை பார்த்துகொண்டு பாலை கோட்டை விட்டுவிட்டேன். கவிதை பொங்கியதோ இல்லையோ பால் நன்றாக பொங்கி வழிய, மளமளவென்று மனைவி வருவதற்கு முன் அடையாளமே தெறியாமல் சுத்தம் செய்து விட்டு ..
"அப்பா? பூஸ்ட்? இவ்ளோ நேரமா ... ". அதற்குள் அடுத்த பயல்
"அப்பா இந்த குக்கர் பாப்கார்ன் எப்படி செய்யறது. போன தடவை சரியா வரலை."
"சரி கொண்டா ... அப்பா கிட்ட குடு - ஐ வில் ஷோ யு ஹொவ் .. " என்று பெருமிதமாக சொல்லி விட்டு, கம்ப்யூட்டரையம் கவிதையையும் கோவிந்தா என்று விட்டு விட்டு வெண்ணை பாப்கார்ன் மோகத்தில் அங்கு சென்று - அதை வெடிக்க விட்டு ... மற்றும் பாலையும் சப்பளை செய்து விட்டு .. மீண்டும் கவிதைக்கு வந்து .... விட்ட இடத்தில் இருந்து ...
"பால் காய்ச்சி ..பண் அமைத்து .. " அய்ய இல்ல இல்ல -
"பா இயற்றி ..பண் அமைத்து .. :" என்ற வரியை முடித்தேன்.
சரி இவ்ளோ பேரை சொல்லிட்டு - கம்பனை சொல்லலென்னால் தமிழறிவு இல்லேன்னு இழிவு வரும் .. அதனால - கம்பனை போட்டே ஆகணும்னு இன்னொரு வரி ...
"நான் கம்பனில்லை ... " என்றது முடிவானது.
"அப்பா இன்னுமா எழுதறே? "
"கவிதை முடிஞ்சுதுடா கதை எழுதறேன்." .. என்றேன்.
கடைசி வரி மட்டும் முடிவாகவில்லை போடு.. மனைவி வந்து
"என்ன எழுதறே? தமிழ் ப்ளாக்கா? " என்று கேட்க , பெருமிதமாக இதுவரை எழுதியதை சொல்லி "கடைசி வரி மட்டும் இன்னும் சேர்ந்து வரலை" இப்போ என்று .. சொல்லிக்கொண்டே ... மீண்டும் முயன்று "கோர்த்து வார்த்த வார்த்தை மட்டும் கவிதையா?" என்று சொல்லி ..ம்ஹூம் என்று இரண்டு முறை மீண்டும் முயன்று டக்-என்று நல்ல வரி ஒன்று தானாகவே அமைந்தது ...
அவ்வளவுதான் ... ஆச்சு !
கடைசியிலே இப்போ கவிதை
கண்ணிமைக்கும் நேரத்திலே கவியமைக்கவென்ன நான்
கண்ணதாசன் என்னுகின்ற கனவொன்றும் இல்லையே !
காளமேகம் கண்டிராத காவியம்தான் கரைத்திடவே
காத்திருந்த கவியென்றும் சொல்லவும்தான் இல்லையே !
பாவியற்றி பண்ணமைத்து பாடவொன்றும், பாரதிநான்
பார்த்திடுவீர்! என்ற எண்ணம் ஓன்று கூட இல்லையே !
கம்பனில்லை, சும்பனில்லை கொம்பனொன்றும் இல்லையே
காலியான காகிதத்தில் கறுப்பினாலே கிறுக்கியே,
கோலேந்தும் கவிஞர்தம் காலெய்தும் கனவிலே
கோர்த்து சேர்த்த வார்த்தை ஜாலம் மட்டுமிங்கே கவிதையோ?
--
சின்னப்பயல் சீனன்
Comments