கச்சேரி ட்யூடி - பாகம் ரெண்டு

பாகம் ஒண்னு எங்கே என்று கேட்பவர் இங்கே செல்லவும்

----

வெள்ளி மாலை ஒரு நாலரை மணி இருக்கும் - " டோடைன் .. டோடைன் " என்றது என் கணிணி . 12-ஆவது மாடி சன்னலிலிருந்து வேடிக்கை பார்ப்பதை நிறுத்தினேன் - அய்யா சாமி - இது ஒரு "அவுட் லுக் " மீட்டிங் நோட்டீஸ் போலிருக்கே - வெள்ளி மாலை எந்த ஒரு சந்திப்புக்கும் சம்மதிக்கவில்லையே - அடடா என்று பயந்து கொண்டே என்னுடைய "லினுக்ஸ்"-ஐ விட்டுவிட்டு - மைக்ரோசாப்ட் விண்டோஸ் திரை காப்பானை செயலிழக்க செய்தேன் - அட இதானா ... !!

----
தமிழில் வலைப்பதிவு செய்ய ஆரம்பித்ததிலிருந்து என் மூளைக்கு கொஞ்சம் அதிகமான வேலை கிடைத்திருக்கிறது. அன்றாடம் பேசும் பொது பற்பல ஆங்கில சொற்களை தடையில்லாமல் பயன் படுத்தி விட்டு - இங்கு அமர்ந்து இதை எழுதும் பொது - தமிழ் சொற்கள் மற்றும் தமிழ் கலைச்சொற்கள் என்ன உபயோகப்படுத்துவது என்று பிடிப்பது பெரிய காரியமாக உள்ளது. ("என்னங்க சிரிக்கீங்க? பத்து வருஷம் ஆச்சுங்க!") ஆகையினாலே - இந்த எழுத்தில் பல பிழைகள் இருக்கும் - மன்னித்தருள வேண்டும் என்று கேட்கலாம் - செய்யப்போவதில்லை - பதிலாக - உங்களுக்கு சரியான பொருள் அமைந்த வேறு வார்த்தைகள் தெரிந்தால் , அல்லது வேறு பிரயோகம் தெரிந்தால் - எனக்கு தெரியப்படுத்துங்கள் - தவிர ஏதாவது தொழில்நுட்ப கலைச்சொல் அகராதி இணையத்தில் இருந்தால் கொஞ்சம் சுட்டிக்காட்டவும் - "கோடி புண்ணியமாப் போகும் சாமியோவ்!". நன்றி - இப்போ மீண்டும வெள்ளி மாலை ..
--

மறந்து விடக்கூடாது என்று நான் போட்டு வைத்திருந்த "ரிமைன்டர்" தான். (ஞாபகம் ஊட்டி ??)". "ஸ்ரீமதி சௌம்யா - MIT - Sunday 4.00 pm" என்றது. சௌம்யா சௌம்யா என்று பல நூறு முறை கூறிஇருப்பாள் என் மனைவி - இது ஞாயிறு மாலை நாங்கள் சென்று ரசிக்க வேண்டும் என்று நினைந்திருந்த கச்சேரி. தொலைபேசியில் அவளை உடனே அழைத்து ஞாபகமூட்டினேன். மற்ற பல வேலைகளை சனிக்கிழமை முடித்து கொள்ள வேண்டும் என்றேன்.

இப்போதெல்லாம் சனி, ஞாயிறு-களில் - எதற்குமே நேரம் கிடைப்பதில்லை - வாரம் முழுவதும் வேலை செய்துவிட்டு - போனால் போகிறது - இரண்டு நாட்கள் சென்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு - மீண்டும் வா என்கிறார்கள் - ஆனால் திங்கள் காலை வேலைக்கு சென்றால் - உடம்பு கை-கால் எல்லாம் பின்னுகிறது. "வீக்கெண்டு இன்னும் ஒரு நாள் இருந்தால் என்ன?" என்று தோன்றுகிறது. (இதையெல்லாம் பற்றி என் மனைவி வேறு ஒரு அபிப்பிராயத்தை வெளிப்படுத்தலாம், அது என் பொறுப்பல்ல!! இது சுதந்திர நூற்றாண்டு!!). பாட்டு கிளாஸ், லிட்டில் லீக், லான் மோவிங், அது, இது, கோவில், கடை கன்னி, கச்சேரி என்று ..

ஆங் ... கச்சேரி - உங்களுக்கு தெரியுமா - கச்சேரி என்பது ஒரு உருது வார்த்தையாம் - முகலாயர் காலத்திலிருந்துதான் புழக்கத்தில் வந்ததாம் -

சரி சரி கதைக்கு வருவோம் , அப்ப கிளம்பினோமா ...

"என்ன வழி தெரியுமா?" என்ற என் மனைவியிடம், என் போனில் GPS இல்லை என்பது மனதில் இருந்த போதும், வீராப்பாக "கூக்கிள் மேப்ஸ்" என்று சுருக்கமாக கூறி போன் வைத்திருந்த சட்டைப்பையை இரண்டு முறை தட்டிக் காண்பித்தேன். எவ்வளவு காலம் நீங்கள் இங்கு வசித்திருந்தாலும் போஸ்டன் நகரத்திற்குள் காரில் சென்று தொலையாமல் மீண்டுவிட்டால் அது ஒரு சாதனை. "உமா .. அவ வீட்டுகாரர் Strata center எப்போ போனாலும் தொலைந்து போய்டுவார. அப்டீங்கரா.. ". "எனக்கு தெரியும்-ம்மா.." என்றேன் மாரைத்தட்டிக்கொண்டு. "போன தடவை Wong Auditorium கூட்டிண்டு போனேனா இல்லையா? On Time?".

சீக்கிரமாகவே புறப்பட்டு விட்டோம். "ஆகா!" போஸ்டனில் எனக்கு இடத்தை நேரத்தில் கண்டுபிடிக்க வேண்டிய முக்கியமான சில அதிக நிமிடங்கள். "ஆகா!". காரை கிளப்பியது தான் தாமதம். காருக்குள் வாசனை கிளம்பியது. "அட ராமா...!". பி.டி. உஷா வேகத்தில் செயல்பட்டாலும் என் மனைவி சின்னவனை எடுத்து உள்ளே சென்று - கொஞ்சி திருப்பி படுத்தி அமுக்கி வளைத்து டியாபரை அவிழ்த்து அலம்பி துடைத்து போட்டு மீண்டும் வந்து வியர்வையும் பெருமூச்சுடனும் காரில் அமர்துவதற்குள் - பதினைந்து நிமிடங்கள் தாமதம் ஆகி விட்டது. "ஒகோகோ!" என்றேன் மனதிற்குள்.

"காட்டு வழி போற பொண்ணே கலங்கி நிக்காதே .. " இளையராஜா மனதில் தைரியமூட்ட .. மோடோரோலா Q-வை எடுத்து கூகிள் மேப்சை இயக்கினேன். 57 நிமிடங்கள் என்று பார்த்தவுடன் ச்பீடோமீட்டார் 75-இல இருந்து 85-ஆனது. மாமா கார்களுக்காக (ஆமாங்க போலீஸ் தான்!) வேவு பார்க்கும் வேலையை பின்னால் அமர்த்திருந்த "concerts"-இடம் கொடுத்து வைத்திருந்தேன் ..

கூகிள் காண்பித்த வழி பழக்கமில்லாததாக இருந்ததால் .. Wong சென்றுவிட்டு அங்கிருந்தது Strata-வை பிடிக்கலாமா இல்லை .. கூகிள் சொல்வதை கேட்டு மானத்தை காத்து கொள்ளலாமா என்று மனதில் வாதாடி விட்டு .. நான் என்றுமே செய்யாததை செய்தேன். புல் ஓவர்!. காரை ஒதுக்குபுறமாக நிறுத்தி - Q-வில் சூம் செய்து வரைபடத்தை இடத்தும் வலதுமாக நகர்த்தி நகர்த்தி புரிந்து கொள்ள முயன்று கொண்டிருந்தேன்..

"என்ன சார் .. என்ன மேட்டர்?" பக்கத்து சீட்டிலிருந்து சிரிப்பு கலந்த எக்காளம். அடாடா நம்ம ச்டார்ரோ-டிரைவ் .. சரி .. மெமோரியல் டிரைவ் ... என்று நினைக்க கூட இல்லை .. அரை நொடியில் ஒய் ஒய் ஒய் , பளிச் பளிச் பளிச்.. என் பின்னே காவல்காரர். "அடக்கடவுளே!, இப்போதான் பார்த்தானா இல்லே 85-இலா?". Shrek திரைப்படத்தில் வரும் "புஸ்-இன்-பூட்ஸ்" பூனையின் "நான் பால் குடிக்கவில்லையே" முகத்தை என் முகத்தில் வரவழைத்து கொண்டிருந்தேன். அது வேலை செய்ததா என்று தெரியவில்லை. வந்தவர் "ஆர் யு ஆல் ரைட்?" என்று குசலம் விசாரித்து விட்டு, என் குலம் கோத்திரம் எல்லாம் வெகு நிதானமாக கேட்டு தெரிந்து கொண்டு "டிரைவ் சேப்" என்றுவிட்டு சென்றார். பெருமூச்சு!! அருகிலிருந்து ஒலிபரப்பு "சொன்னேனே! கேட்கல. மெதுவா போங்கோ! ஒரு வர்ணம் போனா போறது! ". சரிதான். அரை மணி லேட்!!

Exit எடுத்தவுடன் நேரே மெமோரியல் ட்ரிவ்-ஐ நோக்கி சென்றதும் தான் ஞாபகம் வந்தது - ஞாயிறுகளில் இந்த பாதையை மூடி வைத்திருப்பார்கள் என்பது!!. DETOUR - என்ற வார்த்தைகளை அலசி தேடினேன் - எங்கும் காணோம். பின்னால் வரும் வாகனங்கள் கொஞ்சம் restless ஆக - நடுவில் காருக்குள்ளிருந்து "ஆர் வீ தேர் எட்?", "ஐ அம போர்ட்", என்ற நச்சல்களுக்கு இடையே - என் ரத்த அழுத்தம் மேலேற - சரிதான் என்று எதோ ஒரு ரோட்டில் புகுந்து, தொலைந்து, கேம்பிரிட்ஜ்-ஆ, போஸ்டன்-ஆ என்று தெரியாமல் பல தெருக்களிலும், ஒரு வழிப்பாதைகளிலும் நுழைந்து வெளி வந்து - பற்பல நிமிடங்கள் கடந்து, கடைசியில் எப்படியோ போய் சேர்ந்தோம். காரை நிறுத்த கொஞ்சம் பாடுபட்டு ஒரு மையில் தள்ளி நதியோரம் நிறுத்திவிட்டு வோங் ஆடிடோரியாத்தை நடந்து சென்றடைந்தோம். யம்மாடி!! சாமி!! மணி ஐந்து!!

----
கேலரி சீட்டிங்கில் - என்னுடைய ஆஸ்தான மேல் வரிசை இடது கோடி இருக்கைகளில் ஏற்கனவே இருவர். நல்ல வேளை இரண்டு மூலை சீட்டுகள் மட்டும் காலி. உள்ளே நுழைந்த மறு நொடி சின்னவன் வாயில் பால் பாட்டிலை அமுக்கி, கும் கும் என்று தட்டி, மகா-கனம் பொருந்திய கார் சீட்டை முன்னும் பின்னும் பயங்கரமாக உலுக்கி, கச்சேரியை ரசிக்க வந்த மற்றவர் கவனிக்குமுன்னே ஐந்து நிமிடங்களில் கனவுலகிற்கு அனுப்பிவிட்டு, அவன் கிழே விட்டெறிந்த பாட்டிலை ஞாபகமாக மீண்டும் பேபி- பேக் என்ற மூட்டையில் ஒரு மூலையில் சொருகினேன். பெரியவனுக்கு க்ரேயான் பொட்டலத்தை திறந்து கொடுத்து, DVD-ஐ இயக்கிக் கொடுத்துவிட்டு - பிறகு நினைவுலகிற்கு வந்தோம். பெருமூச்சு விட்டு விட்டு என்ன ராகம், தாளம் என்று மெதுவாக ரசிக்க ஆரம்பித்தோம். எங்கள் முன்னால் சீட்டில் இன்னொரு DVD இயங்கிக்கொண்டிருந்தது - அட நம்ம iPhone நண்பர்!!.



ட்யூட்டி போட்டுகொண்டு .. பெரியவனுக்கு பாத்ரூம், சின்னவனுக்கு டியாபர் மாற்றல், இருவருக்கும் இரவு சாப்பாடு என்று மாற்றி மாற்றி நானும் மனைவியும் உள்ளே-வெளியே விளையாட்டு விளையாடிக்கொண்டு .. சில சமயம் முன் கதவிற்கு பின்னால் ஒளிந்து கொண்டு ஒட்டு கேட்டு கொண்டு முடிந்தவரை கச்சேரியில் கவனம் செலுத்தினோம்/ரசித்தோம்.

---
இத்தனையும் செய்து கொண்டிருந்தால் கச்சேரி சென்று என்ன பயன் - என்ற கேள்வி எழவேயில்லை. ட்யூட்டி ட்யூட்டி-தான். அது பாட்டுக்கு அது. அதை நினைத்துகொண்டிருந்தால் வேறேதும் செய்ய இயலாது, முடியாது. இருந்த சில மணி/ நேரத்தில் நன்றாக ரசித்தோம். என் நண்பன் அடிக்கடி சொல்வது நினைவிற்கு வருகிறது. கொடுத்த காசிற்கு நல்ல "வசூல்" தான். கேட்க கேட்க கற்பது வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த மாதிரி பெரிய வித்வான்கள் பாடுவதை நேரே சென்று அனுபவிக்க கிடைப்பது அரிதுதானே. [[ தவிர நாலு பேரிடம் சௌம்யா கச்சேரி சென்றேன் என்று நான் பீத்திகொள்வேன் .. ஹீ ஹீ ஹீ :-) ]].

----
அவர் பாடியதில் நான் நினைவில் கொண்டவை

  • ஹிமாச்சல தனையா - Himachala thanaya
  • மாகேலரா விசாரமு - Makelara vichaaramu
  • காந்திமதி கருணா நிதி - Gandhimathi karunaanithi
  • மயூர நாதம் அணிசம் பஜாமி - Mayoora naatham anisam
  • தந்தை தாய் வேறு எவர் - Thanthai thaai vEru evar
  • பழ நீ பழம் நீ - ராகம் தானம் பல்லவி - Pazham nee
  • சின்னசிறு கிளியே கண்ணம்மா - sinnachiru kiliyE kannamma
  • பவமான சுட்டு பட்டு - வழக்கமான மங்களம்


Sunday, May 3, 2009 S Sowmya (Carnatic Vocal) with Shri. R.K. Shriramkumar (Violin) and Neyveli Narayanan (Mridangam)

Comments

Popular posts from this blog

வழி மறைத்திருக்குதே

கண்ணனால் பாட்டு பிறந்தது

ஸ்வேதபூதி த்ரிபுண்ட்ரேண ....