கச்சேரி ட்யூடி



சந்தானகோபாலன் கச்சேரி, Neiveli Santhanagopalan

இந்த வருடம் MITHAS (MIT, Cambridge, MA) நல்ல சில வித்வான்களை அழைத்திருக்கிறது.
ஏப்ரல் 19. நெய்வேலி சந்தானகோபாலன் கச்சேரி அற்புதம் - ஆனால் சில குறைகள்.

இந்த கச்சேரிக்கு என் மனைவிக்கும் எனக்கும் முன்னமே ஒரு சின்ன ஒப்பந்தம் - சின்ன பயல் எழுந்தால், அவள் பார்த்துக்கொள்வது என்று, அவனும் கூட சேர்ந்து பாட ஆரம்பித்தால் வெளியில் கூட்டிசெல்வதும் அவள் பொறுப்பு :-). எப்படியோ பேசி அவளும் சம்மதித்து விட்டாள். அடுத்த கச்சேரியில் இது என் ட்யூடி என்று முடிவாகியது.

என் துரதிர்ஷ்டமோ அவள் அதிர்ஷ்டமோ தெரியவில்லை. என் சின்ன பயல் சமத்தாக கார் சீட்டில் முழுக்க முழுக்க தூங்கிவிட்டான் . அடாடா என்று நினைத்திருந்தேன். பெரியவனோ நண்பர் கொண்டு வந்திருந்த DVD பிளேயர் மற்றும் ஹெட்செட்டுக்குள் ஆழ்ந்திருந்தான். ராமாயணம் அவர்களை ஓரிடத்தில் வைத்திருந்தது. அவள் எழஅவேண்டிய நிர்பந்தம் ஏற்படவேயில்லை. மனைவி அவளது நண்பியுடன் ராகங்களை கேட்டு கண்டுபிடிக்கும் ஆர்வத்துடன் இசையை ஆழ்ந்து கவனித்து கொண்டிருந்தாள். எனக்கும் ராகங்களுக்கும் சற்று தொலைவு!!. என் நண்பர் ராகத்தை கண்டுபிடித்துவிட்டு - IPhone-இல் graffiti எழுதி காண்பித்து கொண்டிருந்தார். இல்லை என்றால் Google-il குவிக் சர்ச் செய்து சரி பார்த்து கொண்டிருந்தார்.

DVD முடிந்தவுடன் பெரியவனை விளையாடாமல் பாட்டு தாளத்தை கேட்டு ரசிக்க சொல்லி கோபித்து கொண்டிருந்தேன். எனக்கு வராத ஜ்னானம் அவனுக்கு வரட்டுமே என்றுதான். திங்கட்கிழமைக்கு வேண்டிய ஆபீஸ் சமாச்சாரம் கொஞ்சம் பாக்கி யிருந்தது. மளமள என்று கணினியை இயக்கி முடித்து வைத்தேன் - MIT-யில் wireless இருந்தது. இருந்தாலும் கானம் ஒலிக்கும்போது வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை.

ராகம் தானம் பல்லவி-யில் "தானம்", மற்றும் நான் முக்கியமாக ரசிக்க வந்திருந்த 'தனி ஆவர்த்தனம்' பகுதிகளுக்காக காத்திருந்தேன். தனி வந்ததா சென்றதா - கணிணியில் ரொம்ப ஆழ்ந்து விட்டேனா - ச்சே - தப்பு பண்ண கூடாது என்று நினைத்தேன். சென்றது - கவனித்தேனா தெரியவில்லை. தஞ்சாவூர் முருகபூபதிக்கு ரொம்ப கால அவகாசம் கிடைக்கவில்லை என்று நான் நினைக்கிறேன். ஆனால் அவரும் சந்தானகோபலனும் சேர்ந்து எப்படி மூணில் நாலை, ஐந்தை - அமர்த்துவது என்று எடுத்துகாட்டி விளக்கியது பிடித்தது. என் குருவிடம் சென்று விளக்கத்தை புரிந்து கொள்ள வேண்டுமென்று மனதில் ஒரு கோடிட்டு கொண்டேன்.

சின்ன பயல் எழுந்தான். பசி வந்திருக்குமே. என் மனைவி என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு - "சரி சரி" என்று மனதுக்குள் கூறிக்கொண்டே - அமர்ந்து இருந்தாள். "சரி" என்று நானும் வேறு ஒரு தொனியில் சொல்லிக்கொண்டே பயல்களுடன் வெளியில் சென்றேன். ஒரு நிமிடம், இரண்டு நிமிடம், மூன்று நிமிடம். "சரி. நீங்க உள்ள போங்கோ" என்ற குரல் என் பின்னே ஒலித்தவுடன் அப்படியே போட்டு விட்டு உள்ளே சென்றமர்ந்தேன்.

அதிர்ச்சி - நான் கேட்டது - "பவமான சுதுடு பட்டு நீ நாம .. " மங்களம் ஒலித்து கொண்டிருந்தது. ஏன்? என்ன? என்றேன். IPhone graffitti-யில் "RTP?" என்று மட்டும் கேள்வி வரையப்பட்டிருந்தது. சாதரணமாக எட்டு அல்லது எட்டரை வரை போக வேண்டிய கச்சேரியை எழு மணியுடன் முடித்துக்கொண்டார். RTP பாடவில்லை - RTP மற்றும் Lecture-Demonstration அடுத்த நாள் திங்கள் இரவு எழு மணி செய்வோம் என்று சொல்லி மாற்றியது எனக்கு கொஞ்சம் ஏமாற்றம். அவர் RTP பாடவில்லை என்பதை விட ஏன் மனைவி எளிதாக "கச்சேரி ட்யூடி" முடித்து கொண்டு விட்டாளே என்று நினைத்து - அடாடா என்று முணுமுணுத்தேன். "உள்ளே போங்கோ" என்று சொல்லும்போது, ஏன் மனைவி முகத்தில் ஒரு புன்முறுவலை பார்த்தேனா என்று நினைத்து நினைத்து பார்க்கிறேன் - தெரியவில்லை.

அன்று நின்னுகொரியில் ஆரம்பித்தார். என் மனதை கவர்ந்தது - "சாம கான பேத தண்ட சதுர ". மகாராஜபுரம் சந்தானம் அவர்களே மீண்டும் வந்து பாடியது போலத் தோன்றியது. சூப்ப்பர் குரல். தவிர ஒன்றிரண்டு கேள்விபபட்ட பாடல்கள் கேட்க கிடைத்தது. நான் முதல் முறையாக கேட்டவை - "சங்கரி சங்க்குரு சந்திரமுகி".



கச்சேரிக்கு பின்னர் - சந்தானகோபாலன் அவர்களுடன் ஒரு புகைபடம் எடுத்துகொண்டோம். அவர் ஒரு e-learning இணைய தளம் வைத்திருப்பது எனக்கு பின்னர் தெரிய வந்தது. இதோ இங்கே - http://www.imi.in/cgi-bin/elearning/query/el_show_cat.pl .




மீண்டும் சந்திக்கும் வரை
அன்புடன் சீனன்.
Nashua

Comments

Popular posts from this blog

வழி மறைத்திருக்குதே

கண்ணனால் பாட்டு பிறந்தது

ஸ்வேதபூதி த்ரிபுண்ட்ரேண ....